செய்திகள்

தீவிர புயலாக வலுப்பெறும் ‘மோன்தா’ புயல்

Makkal Kural Official

சென்னை, அக். 25–

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 28ம் தேதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிகழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சூழலில், தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறவில்லை.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நேற்று மாலையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னம் உருவாகும் என்பதை உறுதி செய்திருக்கிறது.

28–ந் தேதி தீவிர புயல்

வங்கக் கடலில், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு–தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் 28ம் தேதி தான் தீவிர புயலாக வலுவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த புயலானது ஆந்திரத்தை நோக்கி நகரும் நிலையில், மச்சிலிப்பட்டனம் – விசாகப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். இதற்கு மோன்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோன்தா என்ற பெயர் தாய்லாந்து வழங்கியது. இந்த பெயருக்கு ‘அழகான மலர்’ அல்லது ‘மணம் வீசும் மலர்’ என்று அர்த்தம். புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் வரும் 27, 28ம் தேகிளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *