செய்திகள்

தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள் சிறுபான்மை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Makkal Kural Official

சென்னை, டிச.19–

தி.மு.க. என்னும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று சிறுபான்மை மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அண்ணா தி.மு.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய பரிசுப்பை வழங்கினார்.

தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘’இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களாலும் கிறிஸ்துமஸ் தினமாக மகிழ்வுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கிறிஸ்துவ மக்களை மிகவும் நேசித்தவர். தனது திரைப்படங்களில் இயேசுபிரானின் கருத்துக்களை, பாடல்கள் வாயிலாக சொல்லி மக்களை நேர்வழிப்படுத்தியவர்.

அம்மா கிறிஸ்துவ பெருமக்களை நேசித்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அண்ணா தி.மு.க. சார்பில் அனைவரோடும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார். சிறுபான்மை மக்களுக்கு அரசின் மூலம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்படி செய்தார். அம்மாவின் அரசும் அதை தொடர்ந்து செய்து வந்தோம்.

இன்றைக்கும் இந்த இருபெரும் தலைவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அவர்களின் வழியில், சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் அண்ணா திமுக-வின் சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை நாம் சீரோடும், சிறப்போடும் கொண்டாடி வருகிறோம்.

குட்டி கதை

இயேசுபிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாக வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை – ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும், மக்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் நமக்கு அறிவுறுத்தினார்.

இந்த கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

ஒரு ஊரில், ஒரு விவசாயி, தனது விளைநிலத்தின் அருகில் ஓர் ஆட்டுப்பண்ணை வைத்து, நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பர்களையும், காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பால் ஆடுகள் நன்கு வளர்ந்தன.

இதை பார்த்த சில ஓநாய்கள், எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று, நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால் காவலாளிகளின் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்களால் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இரையாக்க திட்டமிட்டன.

ஒருநாள் இரவில், ஓநாய்கள் ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக் கொண்டு, கள்ளவாசல் வழியாக உள்ளே வந்து, தாங்களும் ஆடுகள்தான் என்பதைப் போல நடித்து, அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து, தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரை ஆக்கிவிட்டன.

அந்த அப்பாவி ஆடுகள், தாங்கள் ஓநாய்க்கு இரையாகும் போதுதான், அந்த ஓநாய்களின் சுய ரூபத்தை அறிந்து, ‘ஐயோ மோசம் போய்விட்டோமே’ என வருந்தின.

ஓநாய் கூட்டத்திடம் எச்சரிக்கை

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய உண்மை என்னவென்றால், ‘காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை’. இன்றைய அரசியலில், பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கிவிடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த 55 மாத காலத்தில், சிறுபான்மை மக்களுக்கு அண்ணா திமுக அரசின் மூலம் வழக்கமாக கிடைத்து வந்த பல நலத் திட்டங்கள் இப்போது கிடைப்பதில்லை.

மக்களை ஏமாற்றும் கட்சி

திமுக ஆட்சி என்பது, விளம்பர மாடல் ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி, மக்களை ஏமாற்றும் ஆட்சி’. மக்கள் பயன் பெறுகின்ற வகையில் நல்லாட்சியை அண்ணா திமுக அரசு வழங்கியது.

இந்திய துணை கண்டத்திலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என்பதை இங்கே உறுதியாக சொல்ல முடியும்.

தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்காக கபட நாடகம் ஆடுகின்றனர். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என பேசுவார்கள்.

மற்றொரு மேடையில் எனது மனைவி கிறிஸ்தவர், எனவே நானும் கிறிஸ்தவர் தான் என பொய் பேசுவார்கள். இன்னொரு மேடையில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல எனக் கூறி நடிப்பார்கள். இந்த கபட வேடதாரிகள் யார் என்பதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக மக்கள் நலனுக்காக, அண்ணா திமுக மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழக முன்னேற்றத்திற்காக கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சிறுபான்மை மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அண்ணா தி.மு.க. என்கிற இந்த மாபெரும் இயக்கம் புரட்சித் தலைவர் தொடங்கி, இன்று வரை ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக நல்லிணக்க இயக்கம்.

எத்தனை நெருக்கடிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கள் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்பதில் யாருக்கும் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருந்ததில்லை.

அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தவரை சட்டம், ஒழுங்கு திறம்பட பாதுகாக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் சாதி, இன, மத மோதல்கள் நடைபெற்றதில்லை.

கூட்டணி என்பது ஒப்பந்தம்

அண்ணா திமுக கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒரு ஒப்பந்தம் மட்டுமே. கொள்கை என்பது எங்கள் கட்சியின் உயிர்மூச்சு போன்றது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைப்பார்கள். அந்த அடிப்படையில்தான் அதிமுகவும் கூட்டணி வைத்திருக்கிறது.

1991 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆக, கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அது, அதிமுகவிடம் இருக்கிறது என்பதை சிறுபான்மை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் சிந்தனைக்காக ஒரு சிலவற்றை கூட்டத்தின் வாயிலாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அண்ணா திமுக ஆட்சியில் குறிப்பாக நான் முதல்வராக இருந்த காலத்தில் சிறுபான்மையினர் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது.

தி.மு.க. வாய்சவடால்

சிறுபான்மை மக்களுக்கு என்று எந்த ஒரு நன்மையும் செய்யாமல் வாய் சவடால் பேசி வாக்குகளை மட்டும் பெறக்கூடிய தந்திரவாதிகள் திமுகவினர்.

எனவே தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திமுக ஒரு தீய சக்தி, மக்கள் விரோத ஏமாற்று பேர்வழிகள் என அடையாளப்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மாவும் தன் வாழ்நாள் முழுவதும் இந்த தீய சக்திகளை எதிர்த்து போரிட்டார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழக மக்கள் பல்வேறு வகைகளில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை.

தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் பற்றிய செய்திகள் வராத நாட்களே இல்லை.

நான் தூத்துக்குடியில் எழுச்சிப்பயணம் சென்றபோது பலதரப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினேன். அப்போது சில பேராயர்கள் என்னை சந்தித்தார்கள். ‘நாங்கள் பள்ளி, கல்லூரி நடத்துகிறோம், மாணவர்கள் போதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கண்டிக்க எங்களால் முடியவில்லை. அதனால் நாங்களாக உங்களைத் தேடி வந்திருக்கிறோம். ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே போதையில் இருந்து மாணவர்களை மீட்க முடியும் என்றார்கள்.

எனவே மக்கள் குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்கள் வருகின்ற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் நடக்கின்ற சீர்கேடுகளை களைய அதிமுகவோடு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கத்தை பேணுகின்ற தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுகின்ற அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டணியை ஆதரிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, செம்மலை, என்.தளவாய்சுந்தரம், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி.,

வைகை செல்வன், பா.பென்ஜமின், மற்றும் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், வி.எஸ்.பாபு, எம்.வி.அசோக், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் பி.சின்னையன்,

ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவர் அணி துணை செயலாளர் ஆ.பழனி, செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இ.எஸ்.சதீஷ்பாபு, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், வழக்கறிஞரும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளருமான ஆர்.சதாசிவம், வட்ட செயலாளர் கே.துளசி, வி.எஸ். வேல் ஆதித்தன், உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *