செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

Makkal Kural Official

சென்னை, ஆக. 17–

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள்.

அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும், அனைத்து ரெயில்களிலும் முன் பதிவு முடிவடைந்தது.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரெயில்களில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. அக்டோபர் 19-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு வருகிற புதன்கிழமையும், தீபாவாளி நாளான அக்டோபர் 20-ந்தேதிக்கான முன்பதிவு வருகிற வியாழக்கிழமையும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெயில்களில் அக்டோபர் 13 முதல் 26ம் தேதி வரை சொந்த ஊர் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரெயிலில் நவம்பர் 17–ந்தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *