செய்திகள்

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

Makkal Kural Official

சென்னை, நவ.17

தி.மு.க. 75 அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, 63 புத்தகங்களை வாங்கினார். வரும் ஆண்டுகளிலும் இது தொடரட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று வரை இந்த திருவிழா நடந்தது. நேற்று நடந்த திருவிழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை முதலமைச்சர் சுமார் 2½ மணி நேரம் பார்வையிட்டதோடு, 63 புத்தகங்களையும் வாங்கினார்.

அதில், திராவிட இயக்க புத்தகங்கள், வரலாறு புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள் உள்பட 63 புத்தகங்களை படித்துப்பார்த்து வாங்கிச் சென்றார்.

இந்த மாபெரும் அறிவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின், டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, சென்னை மாநகர நூலக ஆணையக்குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. 75 அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி– கொள்கைக் கருவூலம். வள்ளுவர் கோட்டத்தில் 2 மணி நேரத்துக்குமேல் திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த 50-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறை வளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக ‘கேரி ஆன், பட் ரிமம்பர்’ எனும் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தி.மு.க. இளைஞர் அணியினருக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள். வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *