செய்திகள்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவோம்: எடப்பாடி – பியூஷ்கோயல் உறுதி

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

அ.தி.மு.க. – பா.ஜ.க. வலுவான கூட்டணி; தமிழகத்தில் ஊழல் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.

இதில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, அண்ணா தி.மு.க., பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

உதயநிதி ராஜினாமா

செய்ய வேண்டும்

பியூஷ் கோயல் கூறியதாவது:–

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்டகால நண்பர்.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை உணவு அருந்தினேன்.

தி.மு.க. ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டனர். தமிழக மக்களின் நலனுக்காக தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை முழுமையாக வீழ்த்தி அண்ணா தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வரும்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும்.

நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். பிளவுவாத அரசியல் செய்கிறார் துணை முதல்வர். இந்திய சேத்திற்கு எதிரான கருத்தை அவர் கூறிவருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழகத்தில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

”பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். நாளை நடைபெறும் கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கும். தமிழகத்தில் பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. இந்த அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பணியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *