சென்னை, நவ. 22–
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது எனவும் பேசப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பானது.
இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். ‘இந்தியா கூட்டணி’யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
![]()




