சென்னை, ஜன. 4:
தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘போர்ட்டலை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.
இதன் தொடக்க நிகழ்வாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெறும் வகையிலான செல்போன் எண், வாட்ஸ்-அப் எண், மின்னஞ்சல், இணையதளம், சமூக வலைத்தள பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) போர்ட்டல் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி 08069446900 என்ற செல்போன் எண், 9384001724 என்ற வாட்ஸ்அப் எண், dmkmanifesto2026@dmk.in என்ற மின்னஞ்சல், http://www.dmk.in/ta/manifesto2026என்ற இணையதளம், dmkmanifesto26 என்ற சமூக வலைத்தள பக்கங்கள் (முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் டுவிட்டர்), tnmanifesto.ai என்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘போர்ட்டல்’ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மக்களிடம் செல்லுங்கள், அவர்கள் சொல்லும் கருத்துகளை கேளுங்கள் என்ற மையக்கருத்தை வைத்துக்கொண்டு தான் ஒவ்வொரு முறையும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மக்களின் கருத்துகளை கேட்டு உருவாக்கப்படும் இந்த தேர்தல் அறிக்கை தொடர்ந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கையாகத்தான் எப்போதுமே இருந்து இருக்கிறது.
அந்த வழியில் இந்த செயற்கை நுண்ணறிவு வலைத்தள ‘போர்ட்டல்’ அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் தங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்கலாம். அந்த ‘போர்ட்டலில்’ இருக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக எந்த இடத்தில் இருந்து வருகிறீர்கள், உங்களின் கோரிக்கை என்ன என்பனவற்றை எல்லாம் பகுத்தாய்ந்து அதை எங்களுக்கு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





