செய்திகள்

தி.மு.க.– ‘சாரிம்மா’ மாடல் சர்க்காராக மாறி விட்டது: விஜய் ஆவேச பேச்சு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 13–

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது ‘சாரிம்மா மாடல்’ சர்காராக மாறிவிட்டது என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் திருப்புவனம் காவல் நிலைய லாக்அப் மரணத்தை கண்டித்தும், கொலைக்கு நீதி வேண்டியும் இன்று அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். த.வெ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்துள்ளதால் த.வெ.க.-வினர் அங்கு குவிந்தனர்.

சாரி வேண்டாம், நீதி வேண்டும்

இந்த கூட்டத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது “சாரி வேண்டாம்… நீதி வேண்டும் ” என குறிப்பிடப்பட்டு இருந்த பதாகைகளை விஜய் உட்பட த.வெ.க.வினர் கையில் வைத்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், ”சாரி வேண்டாம்; நீதி வேண்டும்” என கோஷம் எழுப்பினர்.

மேலும் தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து பேசிய விஜய்,

அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, சிஎம் சார்… நீங்க சாரி சொன்னீங்க. அது தப்பில்லை. இப்பொழுது அதன் உடன் இதனையும் சேர்த்து சி.எம். சார் பண்ணிடுங்க.

24 பேர் குடும்பத்துக்கு நிவாரணம்

உங்களுடைய ஆட்சி காலத்தில், இதே மாதிரி போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். அந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் சாரி சொன்னீர்களா? தயவு செய்து அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க. இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்க நிவாரணம் கொடுப்பீங்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துடுங்க.

சாத்தான்குளம் வழக்கில் அன்று பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. அதே சிபிஐ, ஆர்எஸ்எஸ் – பாஜக கைப்பாவையாக தான் உள்ளது.

ஏன் நீங்க அங்க போய் ஒளிந்து கொள்கிறீர்கள். த.வெ.க. சார்பாக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். அதனால் அந்த பயத்தில் நீங்கள் மத்திய அரசின் ஆட்சிக்கு பின்னால் ஒளிந்து கொண்டீர்கள். சாத்தான்குளம் கொலை அவமானம் என்றால் அஜித்குமார் கொலை அவமானம் இல்லையா?

எதற்கு முதலமைச்சர் பதவி

இன்னும் உங்கள் ஆட்சியில் எத்தனை அட்ராசிட்டி? அண்ணா பல்கலைக்கழகம் துவங்கி அஜித்குமார் கொலை வரை அனைத்து வழக்கிலும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. அனைத்தையும் நீதிமன்றம் தான் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமானால், பிறகு நீங்கள் எதற்கு முதலமைச்சர்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து எந்த பதிலும் வராது.

‘அதிகபட்சம் சாரிமா.. தெரியாம நடந்துருச்சுமா, இல்லை என்றால் நடக்க கூடாதது நடந்துருச்சுமா, சாரிம்மா, அவ்வளவு தானே? இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது சாரிம்மா மாடல் சர்காராக மாறிருச்சு, இந்த அரசு, ஆட்சியை விட்டு போவதற்குள், நீங்கள் செய்த தப்பிற்கு எல்லாம் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும்.

இல்லையென்றால் மக்களோடு மக்களாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். த.வெ.க. சார்பாக அதற்கான அத்தனை போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 20 நிபந்தனைகளை போலீசார் விதித்திருந்தனர். அதாவது, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ளதால் நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாகவோ, பேரணியாகவோ செல்லக்கூடாது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறோ, பாதிப்போ ஏற்படக் கூடாது. பட்டாசுகள் வெடிக்க கூடாது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் சரியாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி முடித்து விடவேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து ஆர்ப்பாட்டத்தை நடத்து கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் இதில் அடங்கி இருந்தது. இந்த நிபந்தனைகளை மீறினால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *