ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.
மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த த.வெ.க தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை வந்தடைந்தார். பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே ‘மக்கள் சந்திப்பு’ பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசினார். அவர் பேசியதாவது:-
நல்ல காரியத்தை தொடங்கும் முன் மஞ்சள் எடுத்து வைத்தே தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்; நம் கொடியில் கூட மஞ்சள் நிறம் உள்ளது.
ஈரோட்டின் கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியாரே எங்கள் கொள்கை முன்னோடி. அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கொள்ளை அடிக்காதீர்கள்-
பொது வாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா சம்பாதிக்காதவர் பெரியார். தந்தை பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
“அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தினால் அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வளவு புரோயோஜனமாக இருக்கும். அதை ஏன் செயல்படுத்தவில்லை. வள்ளுவர் கோட்டத்துக்கு காண்பிக்கும் அக்கரையை மக்கள் வாழ்வாதரத்தின் மீது ஏன் காட்டுவதில்லை. இங்கு அரசு நடக்கிறதா? அல்லது அரசு கண்காட்சி நடத்துகிறதா?
இந்த ஈரோடு மண் விவசாயத்திற்கு பெயர் போன மண், இங்க நடக்கிற விவசாயத்திற்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது காளிங்கராயன் அணை, கால்வாய். அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உணர்வு பூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கிறது.
தைரியம் தந்தீர்கள்
இந்த அணை கட்டும் போது அவர் சோர்வு அடைந்துவிட்டார், அப்போது அவங்க அம்மா சொன்னாங்களாம், மகனே காளிங்கா, தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கிறது, மோர் விற்ற காசு, முகடு வரைக்கும் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு அணையை கட்ட தைரியம் கொடுத்தார்களாம். பெத்த அம்மா கொடுக்கும் தைரியம் இருக்கு பாருங்கள், அதை தாண்டி வேற ஏதுமே கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்ட முடியும்.
அப்படி ஒரு தைரியத்தை தான், இப்பொழுது நீங்கள், என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், நண்பா, நம்பிகள், நண்பர்கள் எல்லோரும் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்து இருக்கிறீர்கள், துணையாக இருக்கிறீர்கள்.
இதை பிரிப்பதற்காக என்ன அவதூறுகளை எல்லாம் விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்ன எல்லாம் சூழ்ச்சிகளை செய்து மக்களை நம்ப வைக்கலாம் என்று, இப்படி சூழ்ச்சிகளை மட்டும் நம்புகிற சூழ்ச்சிக்கார கூட்டங்கள் தொடர்ந்து இதை செய்து கொண்டு தான் இருக்கிறது. அவங்களுக்கு தெரியாது, இது, இன்னைக்கு வந்த உறவு அல்ல.
மக்கள் கைவிடமாட்டார்கள்
33 ஆண்டுகளுக்கு மேல இருக்கிற உறவு. சினிமாவுக்கு நான் வந்த போது வயது 10, அப்போது இருந்தே இந்த உறவு ஸ்டார்ட் ஆகி இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. நீங்க என்ன செஞ்சாலும் இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மக்கள் கூடவே இருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் போச்சு.
உங்களை நம்பித் தான் வந்து இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அண்ணா, எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து. அவர்களை பயன்படுத்துவது குறித்து யாரும் கம்ப்ளைன்ட் செய்ய முடியாது. தனியாக சொந்தம் கொண்டாடி யாரும் அழுதுகொண்டு இருக்கக் கூடாது.
மேலும், மஞ்சளை மதிப்பை கூட்டி விற்பனை செய்ய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. கரும்பு, நெல் கொள்முதலில் ஊழல். மஞ்சளுக்கு நியாயமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய சிந்திப்பதே இல்லை.
பவானி – நொய்யலாறு – அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆறுகளை சுத்தப்படுத்துவோம் எனச் சொன்னார்கள்… ஆனால், ஆற்றுமணலை கொள்ளையடிப்பதை மட்டும் சிறப்பாக செய்வார்கள். மற்ற மாவட்டத்தில் மலை, மணல் காணாமல் போனதுபோல இந்த மாவட்டத்தில் செம்மண்ணும் காணாமல் போகலாம்.
அரசு நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான ஊதியம் கூட போராடிதான் பெறவேண்டியிருக்கிறது. பீக் ஹவர்ஸ் மின்சாரத்துக்கான விலையை கூட்டி நம் பொருளாதாரத்தில் அடிக்கிறார்கள். எல்லா மாவட்டத்திலும் பிரச்னைகள் இருக்கிறது. இதையெல்லாம் தீர்க்க எந்தத் தீர்வையும் கொடுக்காமல் மாடல் அரசு எனப் பெருமை பேசுகிறார். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் எனச் சொல்வதும், ஓசி எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”
ஏன் கதறுகிறீர்கள்?
மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ‘மாஸ்’ (மக்கள்) தான் துணை.
நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன். களத்தில் இருப்பவர்களையே எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கும் ஐடியா இல்லை. திமுக ஒரு தீயசக்தி; தீயசக்தி, தீயசக்தி, தீயசக்தி… தவெக ஒரு துாயசக்தி.
இவ்வாறு விஜய் பேசினார்.
ஈரோடு கடப்பாரை குறித்து எப்படி பேசாமல் இருப்பது. தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட ஈரோடு நெம்புகோல். இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத் திருத்ததுக்காக போராட்டம் நடத்தியவர் தந்தைப் பெரியார். 100 வருடத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரநிதித்துவம் கேட்டவர்.
அண்ணாவிடமிருந்தும், எம்.ஜி.ஆரிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. இவர்கள் இருவரையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என யாரும் அழுதுக்கொண்டிருக்கக் கூடாது.
உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் பிறகு ஏன் கதறுகிறீர்கள். பொலம்புகிறீர்கள். முதலில் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறைங்க சார். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு இந்த மக்கள் மாஸ் தான் துணை. பெரியாரை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். நம் அரசியல் எதிரி தி.மு.க. கொள்கை எதிரி பா.ஜ.க.” என்றார்.
2026 தேர்தலில் களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். நீங்கள் கேட்பதற்காக எல்லாம் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது. எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருப்பதால் அவர்களை தான் எதிர்ப்போம்.
எத்தனை பொய் வாக்குறுதிகள்
எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்
சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று தான் திமுக அரசு செயல்படுகிறது. எங்களுக்கு தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே கதறுகிறார்கள். மாறுவேடத்தில் மரு வைத்துக் கொண்டு வருபவர்கள், மண்டை மீது இருக்கும் கொண்டையை மறைக்க வேண்டும். விஜய்யை, தவெகவை எப்படி முடக்கலாம் என்றே 24 மணிநேரமும் அரசு சிந்தித்து வருகிறது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு. இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே. என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.
செங்கோட்டையன் அண்ணன் போல் இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள். தவெகவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
வெள்ளி செங்கோல்
ஈரோடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்க்கு, செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
![]()





