செய்திகள்

தி.மு.க. ஆட்சி முடிவுக்கு கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு

Makkal Kural Official

* தமிழ், தமிழர்களின் எதிரி தி.மு.க.

* போதைப்பொருள் கும்பலிடம் ஆட்சி ஒப்படைப்பு

மதுராந்தகத்தில் நடந்த பிரமாண்ட கூட்டம்

தமிழக வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு அவசியம்

சென்னை, ஜன.24-

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு அவசியம் என்று கூறினார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் பலத்தை காட்ட, கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க செய்வதற்கும், அதில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட பிரசார கூட்டத்துக்கும் தமிழக பா.ஜ.க. ஏற்பாடு செய்தது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வந்தார். மாலை 3.25 மணி அளவில் பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். வரவேற்பை பெற்ற பின் காரில் ஏறி பிரதமர் மோடி பொதுக்கூட்டம் மேடை அருகே சென்றடைந்தார்.

மேடையில் பிரதமர் மோடி ஏறியதும் தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்தப்படியும், இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தப்படியும் சென்றார்.

மேடையில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் திரண்டு இருந்தனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் கைகளை பிடித்து குலுக்கியபடியும், தோள்களை தட்டிக்கொடுத்து, புன்னகையுடன் பிரதமர் மோடி பேசினார். அன்புமணி ராமதாசுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் அவர் கைக்கொடுத்து வாழ்த்தினார்.

ஏலக்காய் மழை

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி சால்வை மற்றும் ஏலக்காய் மாலை அணிவித்து, திருப்பரங்குன்றம் முருகன் படத்தை நினைவு பரிசாக வழங்கினார். அதனைப் பெற்ற மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.

அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் தனது பேச்சின் தொடக்கத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழ்நாடு இப்போது ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. தமிழ்நாடு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விரும்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள், தி.மு.க. கூட்டணியிடம் இருந்து மக்களை விடுவிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒன்றாக இணைந்துள்ளனர்.

கவுண்ட்டவுன் துவங்கியது

தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதனை திரண்டிருக்கும் மக்களிடம் தெளிவாக காண முடிகிறது. தி.மு.க. ஆட்சியின் முடிவுரைக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.

தி.மு.க.வுக்கு ஆட்சி செய்ய 2 முறை அதிகாரம் அளித்தீர்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள்.

இரட்டை என்ஜின்

ஊழல், குற்றவாளி குழுக்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்று தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழகத்தில் பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு ஜனநாயகம், நம்பகத்தன்மை இல்லை. தி.மு.க. அரசு ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறது. பெண்களை வசைபாடுவது, நமது கலாச்சாரத்தை வசைபாடுவது போன்ற காரணங்களாலேயே தி.மு.க.வில் இருப்பவர்கள் கட்சியில் முன்னேறுகிறார்கள். இதன் பாதிப்பினை தமிழகம் சுமக்க வேண்டியது இருக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தை தி.மு.க.விடம் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு இரட்டை என்ஜின் அரசு அமைவது அவசியம்.

தமிழகத்துக்கு ரூ.3 லட்சம்

கோடி கொடுத்தோம்

கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாயிலாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.3 லட்சம் கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கிறது. காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு ஒதுக்கியதை விடவும் இது 3 மடங்கு அதிகம்.

நாங்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதனை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றி வருகிறோம். சில நாட்களுக்கு முன்புதான் நமது முருகனுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது நம்முடைய தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் அதிகாரங்களுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்தார்கள்.

தமிழர்களின் எதிரி தி.மு.க.

ஆனால் தி.மு.க.வும், அவர்களின் கூட்டணியும் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களை கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள். தமிழ், தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி தி.மு.க.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. காரர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சட்ட ரீதியிலான வழிகளை ஆராய்ந்து நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தார்கள்.

போதைப்பொருள்

கும்பலிடம் ஆட்சி

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் இளைஞர்கள், பெண்கள் ஆற்றல் பெரிய பங்கு இருக்கிறது. இங்கு உள்ள இளைஞர்களை போதைப்பொருள் கும்பலிடம் இந்த அரசு ஒப்படைத்து விட்டது. தங்கள் கண்களுக்கு முன்னால் பிள்ளைகள் சீரழிவதை பார்த்து பெற்றோர்கள் துடித்து கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து மீட்டே ஆக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப்பொருளில் இருந்து மீட்டெடுக்க உதவும்.

தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் குற்றவாளிகளும், மதுபான குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை சி.எம்.சி. ஆட்சி என்று கூறலாம். அதாவது கிரைம், மாபியா, கரப்சன் என்று கூறலாம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மக்களின் உடல்நலத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மருந்துகள், மருத்துவ கருவி தயாரிப்புக்கு ஊக்கமளிக்கும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பல சந்தர்ப்பங்கள் உருவாகும். மத்திய அரசின் முத்ரா திட்டத்தால் இங்குள்ள இளைஞர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக பலன் கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாட்டில் 6 கோடி முத்ரா கடனும், ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான உதவிகள் சிறு தொழில் முனைவோருக்கும் கிடைத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு பராட்டு

உலகெங்கும் இருக்கும் முதலீட்டாளர்களின் முதன்மையான விருப்பமான நாடாக இந்தியா மாறிவருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளோடு ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இந்த மகத்துவம் கொண்ட காலத்திலே தமிழ்நாட்டில் மத்திய அரசோடு இணைந்து பயணிக்கும் அரசாங்கம் ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது மேலும் சுலபமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றினார்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற மோசமான நிலையை அனுபவித்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைத்து தாருங்கள். இந்த அரசாங்கம் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். உறுதுணையாக இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம். தமிழ்நாட்டை வளர்ச்சியுடையதாக ஆக்குவோம். பாரதத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கைகளை ஒன்றாக இணைத்து தூக்கிப்பிடித்து உயர்த்தி காண்பித்தனர். மேலும் தொண்டர்கள் செல்போன் டார்ச் லைட் மூலம் வெளிச்சத்தை காண்பித்தனர்.

மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசி விட்டு, தொண்டர்களை பார்த்து கையசைத்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் மதுராந்தகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அவர் சென்னை விமானநிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார்.

கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ் கோயல், இணை பொறுப்பாளரான மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய மந்திரி எல்.முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, பா.வளர்மதி, சி.வி.சண்முகம், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எச்.ராஜா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, அ.ம.மு.க. மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ், பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி அரங்க வேலு, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா, த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *