செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்: அமித்ஷா ஆவேசம்

Makkal Kural Official

புதுக்கோட்டை, ஜன.5-–

இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் தி.மு.க. ஆட்சி தான், எப்பாடு பட்டாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பிலான யாத்திரை மேற்கொண்டார். அதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன்நகரை அடுத்த பள்ளத்திவயலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் என்.ராமசந்திரன் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். இந்த மாபெரும் அவையின் வாயிலாக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். மோடியின் தலைமையின் கீழ் அனைவரும் அணிவகுப்போம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். வருகிற நாட்களில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் பிற கட்சிகளும் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறோம். எப்படியாவது தி.மு.க. கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்னால், அது தமிழ்நாட்டில் தி.மு.க.வின் ஆட்சிதான். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் மிக குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி என்றால், அது தி.மு.க. ஆட்சி தான். தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒரேநோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவது மட்டும்தான். தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றை கூறிக் கொள்கிறேன்.

ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

2024-ம் ஆண்டு தனியாக தேர்தலை சந்தித்தோம். அந்த தேர்தலில் பா.ஜனதா-–அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்குகளை எண்ணிப் பார்த்தால் கிட்டத்தட்ட 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தமிழ்மொழிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான பரப்புரை செய்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் முதன்முறையாக தமிழை அறிவித்துள்ளது. ரெயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டது.

13 மொழிகளில் திருக்குறள்

மொழிப் பெயர்ப்பு

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரால் தமிழ் இருக்கை அமைத்து இருக்கிறோம். திருக்குறள் 13 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தேர்வுகளை தமிழில் எழுதக்கூடிய வசதியை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்துள்ளார். பிஜி தீவில் தமிழை கற்றுத்தர வசதி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. காங்கிரசும், தி.மு.க.வும் அருங்காட்சியகத்தில் வைத்து இருந்த செங்கோலை, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்த்தார். தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி அழகுபார்த்தார்.

ஊழல் நிறைந்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் வளர்ச்சியை காண முடியுமா?. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை நிலவுகிறது.தமிழக அரசின் ஒட்டுமொத்த வரவு-செலவு திட்ட அறிக்கை என்பது டாஸ்மாக் மதுபானம் மற்றும் கடனில்தான் இயங்குகிறது. உரிமைகளுக்காக போராடும் அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. விவசாயிகளையும் ஏமாற்றுகிற அரசாக இந்த அரசு உள்ளது. தி.மு.க. அரசாங்கம், மற்ற மாநிலங்களின் நச்சு கழிவுகளின் குப்பை கிடங்காக தமிழ்நாட்டை ஆக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்து சடங்குகளுக்கும், சமய நம்பிக்கைகளுக்கும், வழிபாட்டு உரிமைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அயோத்தி ராமர்கோவில் பூமி பூஜையின்போது, அறிவிக்கப்படாத ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்துக்களின் சமய உரிமைகள் பறிக்கப்படுகிறது.

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சி செய்தவர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

2024-ம் ஆண்டு முதன் முறையாக ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது.

2025-ம் ஆண்டு அரியானாவில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. 2025-ம் ஆண்டு மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. டெல்லியிலும் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. 2025-ம் ஆண்டில் பீகாரில் இந்தியா கூட்டணி மண்ணை கவ்வியது. இந்த முறை 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் நமது ஆட்சி அமையும். நாம் அனைவரும் ஒரு உறுதிப்பாட்டுடன் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *