செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்:

Makkal Kural Official

பொள்ளாச்சி, செப்.11-–

அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அவர், பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் நேற்று கலந்துரையாடினார். கூட்டத்தில் நெசவாளர்கள், விவசாயிகள், தொழில் வர்த்தக சபையினர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

கைத்தறி நெசவாளர்களுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, தரமான கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்கப்படும். இதுதவிர துணி நெய்து தேக்கம் அடைந்தபோது சுமார் ரூ.350 கோடி மானியம் கொடுக்கப்பட்டது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் பட்டுசேலை, பட்டுவேட்டி வழங்கும்போது அது கைத்தறி நெசவாளர்கள் மூலம் தயாரிக்கப்படும்.

பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தை உருவாக்க ரூ.500 கோடி நிதி தேவைப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் பணம் இல்லை. இதனால்தான் இன்னும் ஒரு மாவட்டத்தை கூட அறிவிக்க முடியவில்லை. அண்ணா தி.மு.க. ஆட்சியில் 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈழுவதியா சமூகத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொப்பரை விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற கிலோ ரூ.111.80 ஆக உயர்த்தப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு, மறுநடவு செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது. வறட்சி நிவாரணமாக ரூ.2,248 கோடி வழங்கப்பட்டது. பொள்ளாச்சியை தேர்வு செய்து 500 ஏக்கரில் இஸ்ரேல் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தென்னைநார் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கால்வாய்கள் விவசாயிகள் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டது. கள் இறக்க அனுமதி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் பாசன கால்வாய்களை கான்கீரிட் கால்வாய்களாக மாற்றி கடைக்கோடி விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள முதல்-மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமூகமாக சென்ற நிலையில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு முயற்சி எடுக்கவில்லை. இதனால் அந்த திட்டமும் கிடப்பில் கிடக்கிறது.

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு எந்தெந்த பிரச்சினை உள்ளது என்பது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கடன் வாங்கியதால் அதிக அளவில் வரி விதித்து வசூலிக்கும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *