சென்னை, ஆக.6–
14 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 ஆயிரத்து 538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவில் இருந்து இதுதான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டிருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தான், இரட்டை இலக்க அந்த வளர்ச்சியை இன்றைக்கு தமிழ்நாடு எட்டி இருக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2024–-25-ஆம் ஆண்டில், தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, நாம் கணித்ததை விட, இது கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு அதிகம். முன்பு 9.69 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட 2024-–25-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் – இப்போது 11.19 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது.
இதற்கு முன்பு, 2010–-11-ஆம் நிதியாண்டில் கருணாநிதி ஆட்சியில் தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தி.மு.க. ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி. இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில்தான், இந்த வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையில், இது மிகவும் சிறப்பான வெற்றி! இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி இல்லை. அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர் – அனைத்துத் துறை அதிகாரிகள் – கடைநிலை அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்திய நம்முடைய எல்லாருடைய உழைப்புக்கும் கிடைத்திருக்கக்கூடிய கூட்டு வெற்றி இது.
என்னை நம்பி ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த நேரத்தில், இந்த வெற்றிச் செய்தியை நான் காணிக்கையாக்குகிறேன். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கோடு பயணிக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம்தான் இது!
இப்போது அடைந்திருக்கும் இலக்கோடு நான் திருப்தியடைய மாட்டேன். இன்னும் அதிகமான உயரத்தை நாம் அடைய வேண்டும். அதை நோக்கிய பயணத்தை திராவிட மாடல் 2.0-வில் தொடர்வோம்! அந்தப் பயணத்திற்கு நீங்கள் எல்லோரும்தான் துணையாக இருக்கப் போகிறீர்கள்!
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
![]()





