செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஊழல் தான் சாதனை மோடி முன்னிலையில் எடப்பாடி சபதம்

Makkal Kural Official

மதுராந்தகம், ஜன.24–

தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.

தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் என்றும் அவர் கூறினார்.

அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைத் தொடர்ந்து அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘’இந்தியத் திருநாடே மதுராந்தகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணில் பிரதமர் கால் வைத்தவுடனே சூரியனை இயற்கை மறைத்துவிட்டது. மக்கள் கடல் போல் காட்சியளிக்கிறார்கள், மதுராந்தகமே குலுங்குகிறது. இதுவே தேர்தல் வெற்றிக்குச் சான்று.

தி.மு.க.வின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு கொடுத்தது வேதனை மட்டும்தான் எல்லா துறைகளிலும் ஊழல் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா?

ஊழல் தான் சாதனை

தமிழகத்தை கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார், இப்போது ஸ்டாலின் இருக்கிறார். இந்த ஆட்சியில் செய்த சாதனை ஒன்றே ஒன்று, அது ஊழல். ஸ்டாலின் குடும்பம் உலகளவில் பெரிய பணக்கார குடும்பமாக இருக்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை கொண்டுவர முயற்சிக்கிறார். திமுகவுக்காக உழைத்த எத்தனையோ பேர் வீதியில் கிடக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத்தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இடம் கிடைக்கும்.

அதன்படி எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை இளைஞரணி தலைவராக்கினார், எம்.எல்.ஏ ஆக்கினார், அமைச்சர் ஆக்கினார், இப்போது துணை முதல்வர் ஆக்கிவிட்டார். ஆனால், அடுத்து எந்தக் காலத்திலும், எந்தப் பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது, இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம், எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம். பாரதப் பிரதமர் நம்முடன் துணை நிற்கிறார், நம்முடைய இயக்கம் வலிமையானது, கூட்டணி வலிமையானது, இது வெற்றிக்கூட்டணி.

இந்தத் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல், ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். மக்கள் துணை நிற்கிறார்கள். நம்முடைய கூட்டணி தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வென்று அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

நாம் கேட்டதை தந்தார்கள்

மத்தியில் இருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பொய்சொல்கிறார். நாம் கேட்ட திட்டத்தைக் கொடுத்தார்கள், ரயில்வே பாலங்கள் கேட்டோம் கொடுத்தார்கள், தேசிய நெடுஞ்சாலைகள் வழங்கினார்கள். சென்னை மாநகரில் மெட்ரோ 2வது கட்டம் 63 ஆயிரம் கோடி வழங்கி, மத்திய அமைச்சர்களே அடிக்கல் நாட்டினர்.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் காவிரியாற்றில் கடலில் கலக்கிறது. நதி நீர் மாசுபடாமல் இருக்க நடந்தாய் வாழி காவிரி திட்டம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். மோடி நிறைவேற்றித் தருகிறேன் என்று உறுதியளித்து, குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறச்செய்து, 2024ல் அனுமதி அளித்தார். இதை தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தை நிறைவேற்ற எண்ணம் இல்லை.

கழிவுநீர் கலப்பதால் காவிரி நீர் மாசுபடுகிறது, அதை சுத்திகரித்து காவிரியில் விடுவது தான் திட்டம். காவிரி தான் ஜீவநதி, 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. டெல்டா விவசாயிகளுக்கு நல்ல நீர் கிடைக்கும். பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது எந்த நோயும் தாக்காது. இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை மோடி வழங்கியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்ததிட்டத்தை நிறுத்திவிட்டனர். மீண்டும் உங்கள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வென்று, அண்ணா திமுக ஆட்சி அமைக்கும்போது பிரதமர் மோடியின் ஆசியால் இந்த திட்டம் நிறைவேறும்.

ஒரே ஆண்டில்

11 மருத்துவ கல்லூரிகள்

நாம் வைத்த கோரிக்கையை ஏற்று 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரே ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்டது, இதற்கு முன்பாக வரலாறு கிடையாது. இந்த வரலாற்றையும் பிரதமர் நமக்காக வழங்கினார். நம் மாணவர்கள் அதிக இடங்களில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றனர், இதெல்லாம் சாதனை. அண்ணா திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம், கேட்ட திட்டம், கேட்ட நிதி கொடுத்தார்கள், தமிழகம் வளர்ச்சி அடைந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மத்திய அரசைக் குறைசொல்லி, லஞ்சத்தில் திளைக்கிறது.

உலகமே பாராட்டும் அளவுக்கு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் மோடி.

கொரோனா காலத்தில் வல்லரசு நாடுகளால் கூட மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. மோடி எடுத்த நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நோய் எப்படித் தாக்கும், என்ன சிகிச்சை என்றெல்லாம் தெரியாத நிலையில் கூட, மருந்து கண்டிபிடித்து விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றியவர் மோடி. இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு மக்கள் உயிரையும் காப்பாற்ற மருந்துகளைக் கொடுத்து உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேய மிக்க தலைவர் மோடி.

’உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற அண்ணாவின் கொள்கையை உரக்கக் கூறி எம்ஜிஆர் மற்றும் அம்மா வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கூறி, எங்களுக்கு உறுதியாக ஆதரவுக்கரம் நீட்டிவரும் பிரதமர் மோடிக்கும், தே.ஜ. கூட்டணியினருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *