சென்னை, செப் 30–
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.ஐ.டி. நகர் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இதற்கு மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிஐடி நகர் பிரதான சாலையில் நிகழ்ச்சி நடந்தது.
பெருகிவரும் போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டு மக்கள் எளிதாகப் பயணம் செய்திடும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் 300.16 கோடி ரூபாய் செலவில் 13 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசினால் சென்னை மாநகராட்சியின் சார்பில் 3,800 டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்ட முதல் இரும்பு மேம்பாலம் இது.
இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை – பர்கிட் சாலை, – மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – தென்மேற்கு போக் சாலை – நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
40,000க்கும் மேற்பட்ட
வாகனங்கள்…
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து தியாகராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெறுவார்கள்.
புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.
3 அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி,
துணைமேயர் மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





