சென்னை, டிச. 22–
சென்னை தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவுக்கு மறைந்த நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதேபோல, மனோரமாவின் பேத்திகள்– அபிராமி பூபதி (எம்எஸ்சி பட்டதாரி), மீனாட்சி பூபதி (எம்பில் பட்டதாரி) இருவரும். இதே கோரிக்கையை முன் வைத்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.’ அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
‘‘திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆச்சி என்ற மனோரமா– ஐந்து முதலமைச்சர்களுடன் பணியாற்றி இருக்கிறார். சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துப் புகழ் பெற்றுள்ளார். கலைஞர் குடும்பத்துடன் நெருங்கிய நட்புடன் வாழ்ந்து மறைந்தார்.
மனோரமாவுக்கு மத்திய அரசு 2002ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது. உலகத் தமிழ் மக்கள் அனைவரது நெஞ்சத்திலும் நீங்கா இடம் பெற்றார். பல ஏழை குடும்பங்களுக்கு உதவி புரிந்து வாழ்ந்து மறைந்தார்.
இந்தியாவில் இவரின் புகழ் அடுத்த தலைமுறைக்கு தெரியும்படி, அவர் வாழ்ந்த தியாகராய நகர் நீலகண்ட மேத்தா தெரு அல்லது தியாகராய நகரில் ‘AACHI HOUSE’ இருக்கும் மெலோனி ரோடு இதில் ஏதாவது ஒன்றுக்கு ஆச்சி மனோரமா பெயரை சூட்டி அவர்களை சிறப்பிக்குமாறு எங்களின் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் சார்பாகவும் தங்கள் கனிவான பார்வைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். நடிகர் சங்கமும் பரிந்துரை செய்துள்ளார்கள். அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
![]()




