திருவள்ளூர், ஜூலை 14–
திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. இதற்கிடையே 3 தண்டவாளங்களிலும் டேங்கர்கள் தடம்புரண்டதால், ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்வே துறையினர், பணியாளர்கள் இரவு முழுவதும் தீவிரமாக ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, மின்சார ரெயில்கள் ஒரு தண்டவாளத்தில் சென்று திரும்பும் வகையில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணியை ரெயில்வே ஊழியர்கள் செய்தனர். 4 தண்டவாளங்களில் கிடக்கும் வேகன்களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் கிடக்கும் சரக்கு வேகன்கள் அகற்றப்பட்ட பின்பு, தண்டவாளம், மின் கேபிள்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரானதை அடுத்து, 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. சீரமைக்கப்பட்ட ரெயில் பாதையில் ஆலப்புழா, பாலக்காடு உள்ளிட்ட விரைவு ரெயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. 1,2 தண்டவாளங்களில் சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
![]()





