செய்திகள்

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

Makkal Kural Official

திருவனந்தபுரம், ஜன. 23–

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரத்திற்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்பு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவர் எம்.ஜி.சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை வரை ரோடு–ஷோ சென்றார். அப்போது அவரை சாலையிலும் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசத்தபடி ‘ரோடு-–ஷோ’ சென்றார்.

இதன் பின்பு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் – மங்களூரு, திருவனந்தபுரம் – தாம்பரம், திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ருத் பாரத் ரெயில் சேவைகளையும், திருச்சூர்– குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரெயில் சேவையையும், தொடர்ந்து திருவனந்தபுரம் நவீன அஞ்சலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்டார்ட்அப்

நிறுவனத்தை மையமாக்க…

இதன் பின்னர் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது :–

‘‘கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. இன்று முதல், கேரளாவின் ரெயில் இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை நாட்டின முக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மையமாக மாற்ற, குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரு வியாபாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் பெரும்பாலும் மிக அதிக வட்டியில் சிறி தொகையை கடனாக பெற வேண்டியிருந்தது.

முதல்முறையாக, மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகள் வங்கிக் கடன்களைப் பெற்றனர். அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக கடன் பெற்றனர். ஒரு படி மேலே சென்று, மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கென்றே பிரத்யேகமான ஒரு கடன் அட்டையையும் அறிமுகப்படுத்தியது. இங்கு பயனாளிகளுக்கு பிஎம் ஸ்வநிதி கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, நாடு முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் நமது நகரங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

கடந்த 11 ஆண்டுகளாக, நமது அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

மாநில அரசுக்கு திருப்தி:

பினராயி விஜயன்

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், கடவுளின் சொந்த நாடான கேரளவுக்கு மோடியை மிகுந்த மரியாதையுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன். மாநிலத்தில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பல திட்டங்களைத் துவக்குவதற்காக மோடி கேரளாவிற்கு வந்திருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. இத்திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசின் ஒப்புதலை நாங்கள் தொடர்ந்து கோரிவந்த நிலையில் இது மாநில அரசுக்கு மிகுந்த திருப்தியளிக்கும் ஒரு தருணமாகும்.

இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அக்கறையும் நல்லெண்ணமும் வரும் காலங்களிலும் கேரளாவுக்கு தொடர்ந்து காட்டும் என்று நம்புகிறேன். பல்வேறு துறைகள் தொடர்பான கேரளத்தின் நியாயமான கோரிக்கைகளும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படுவதை பிரதமர் உறுதி செய்வார் என்று பினராயி விஜயன் பேசினார்.இந்த நிகழ்ச்சி முடிந்ததும் விமானம் மூலம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்துக்குச் செல்கிறார்.மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *