செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; பக்தர்களுக்கு தரமற்ற அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

Makkal Kural Official

திருவண்ணாமலை நவ. 23:

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அன்னதானம் வழங்குவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் முன்னிலை வகிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஏ.பானுசுஜாதா அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பேசுகையில், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் அன்னதானத்தை குடிக்கும் தகுந்த தண்ணீரில் மட்டுமே சமைக்க வேண்டும். பால் குளிரூட்ட பொருட்களை முறையான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். உணவுபாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே சமைப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றிருக்க வேண்டும்.

வாழை இலையில் உணவை பரிமாற வேண்டும் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது அனுமதி பெறாமலோ அல்லது அனுமதிக்கப்படாத இடத்திலோ அன்னதானம் வழங்கக்கூடாது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அன்னதானம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். தரமற்ற வகையில் அன்னதானம் உணவு தயாரித்து வழங்கினால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முகுந்தன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் அன்னதானம் வழங்குவோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனபிரியா நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *