செய்திகள்

திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரியில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின்’ சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா

Makkal Kural Official

திருவண்ணாமலை,டிச.6-

திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கே.முரளி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது அவர் மரம் போல் வரையப்பட்டு இருந்த ஓவியத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள விளையாட்டு உபகரணங்களையும், பூங்காவையும் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.

இந்த பூங்கா எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏரியின் உபரி நீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடைபாதையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

விழாவில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் பாஸ்கரபாண்டியன், தடகள சங்க மாநில துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அருணை கன்ஸ்ட்ரக்‌ஷன் துரைவெங்கட் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *