சென்னை, ஆக 1–
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-–ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50 ஆயிரம் சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்றும்,
வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.2.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.5.2023 அன்றும் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.2.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.9.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டன.
திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
சமூக- பொருளாதார
வளர்ச்சி அடைய…
அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக- பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
![]()





