செய்திகள்

திருப்பூர் கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Makkal Kural Official

திருப்பூர், ஆக. 7–

சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அண்ணா தி.மு.க., – எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கபாண்டியன் (25), ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சிக்கனுாத்து வந்தார்.

மது அருந்திய பின், தந்தை, மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மூவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். அங்கு சென்ற பண்ணை மேலாளர் ரங்கசாமி, குடிமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், 57, போலீஸ் காரர் அழகுராஜா ஆகியோர், நெடுஞ்சாலை ரோந்து ஜீப்பில் சென்றார். அப்போது, மணிகண்டன், அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்துள்ளார். அவருடன் மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், போலீஸ்காரர் அழகுராஜா மற்றும் பண்ணை மேலாளர் ரங்கசாமி அங்கிருந்து தப்பியோடினர்.

தென்னந்தோப்புக்குள் இருட்டாக இருந்ததால், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலால் நீண்ட துாரம் ஓட முடியவில்லை. அவரை விரட்டிச் சென்ற மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சண்முகவேல் இறந்தார். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக மணிகண்டனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுத்த மணிகண்டன் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டனை எச்சரித்தனர். ஆனால் அவன் மீண்டும் போலீசாரை தாக்க முயற்சித்துள்ளான். இதனால் போலீசார் மணிகண்டன் மீது 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மயங்கி விழுந்தான். உடனடியாக போலீசார் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவனை பரிசோதனை செய்த போது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் மணிகண்டன் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி ஆய்வாளர்

சரவணன் விளக்கம்

இந்நிலையில் என்கவுண்டர் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான். ஆயுதத்தை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம். அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் சுட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *