Uncategorized

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Makkal Kural Official

மதுரை, டிச. 5–

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை 9–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேசமயம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில்தான் முறையாக தீபம் ஏற்றவேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து முன்னணி சட்டப்பிரிவு செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சி வரை நேரில் சென்று ஆய்வு செய்து, ‘தீபம் ஏற்றலாம்’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை, மேல்முறையீடு செய்தது. இம்மனு ஏற்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக்கூறி நேற்றுமுன்தினம் மாலை ராம ரவிக் குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரரான ரவிக்குமார் உட்பட 10 பேர் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் மலைக்கு சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

144 தடை உத்தரவு

இதைதொடர்ந்து மலைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதை தடுக்க திருப்பரங்குன்றத்தில் அவசரம் அவசரமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் தமிழக அரசு அப்பீல் செய்தது. இன்றிரவு (நேற்று) 7:00 மணிக்குள் மனுதாரர்(ராம ரவிகுமார்) தீபம் ஏற்ற வேண்டும். அவருக்கு கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றியது குறித்து நாளை(இன்று) காலை 10.30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில்

மேல் முறையீடு

144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது’ என கமிஷனர் லோகநாதன் அறிவித்தார். இதனால் மீண்டும் பதற்றம் உருவானது. இச்சூழலில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, திருமுருகன், முருகன்ஜி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க, அரசின் தொடர் பிடிவாதத்தால் திருப்பரங்குன்றத்தில் தொடர் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே இருநீதிபதி அமர்வு அளித்த உத்தரவுக்கு எதிராக நேற்றிரவு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர அவசரமாக மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் நேற்றைய உத்தரவு நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. சிஐஎஸ்எப் படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *