மதுரை, டிச.10:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏன் ஏற்றவில்லை என்பது பற்றி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தர விடக்கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் ஐகோர்ட் உத்தரவு கார்த்திகை தீபநாள் மற்றும் அதற்கு மறுநாள் என இரண்டு முறை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று இந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், மலையில் தீபம் ஏற்ற சென்ற ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது ஏன்? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட்டிடம் அறிக்கை பெற்று மத்திய அரசு வக்கீல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த வழக்கு அதே நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான நாட்கள் கடந்து விட்டன.
இந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை வருகிற 12-ந்தேதி நடக்க உள்ளது. எனவே இந்த அவமதிப்பு வழக்கு விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-– திருப்பரங்குன்றம் மலை பகுதியில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்தார் என்று கூறி, நான் 3-ந்தேதி பிறப்பித்த உத்தரவை போலீஸ் கமிஷனர் நிராகரித்ததற்கு சரியான காரணம் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு மனுதாரர் தரப்பினரை மலை ஏற உத்தரவிட்டேன்.
அந்த உத்தரவை அமல்படுத்த மறுத்ததற்கு மாநில காவல்துறையினரிடம் சரியான பதில் இல்லை. அதேபோல மாநகர போலீஸ் கமிஷனருக்காக ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்த கருத்தில் நான் உடன்படவில்லை. இதுதொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதாக நினைத்தேன்.
ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது. அங்கு மாநில அரசின் மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு வரும் என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு விகாஸ் சிங், ஒரே பிரச்சினையை வெவ்வேறு கோர்ட்டுகளில் எழுப்ப விரும்பவில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மனு வாபஸ் பெறப்படலாம் என்றும் பதில் அளித்தார். இதன்மூலம் இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் தலையிடவில்லை என நான் முடிவு செய்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் எந்த இடைக்கால உத்தரவும் பெறப்படவில்லை.
இதன் விளைவாக, இந்த கோர்ட் பிறப்பித்த உத்தரவு இப்போது வரை செல்லுபடியாகிறது. இந்த வழக்கில் நான் பிறப்பித்த உத்தரவுகள் மீண்டும், மீண்டும் மீறப்பட்டு உள்ளன. இது ஒரு மாவட்டத்தில் மட்டும் நடக்கவில்லை. எனவே மாநில அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே வருகிற 17-ந்தேதி பிற்பகல் 3 மணி அளவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர், சட்டம்-–ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் இந்த கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும்.
கோர்ட் உத்தரவு நிறை வேற்றப்படும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதன்படி இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். தலைமைச்செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை செயலாளரிடம் இருந்தும் தேவையான தகவல்கள் பெறப்படும். விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
![]()





