செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம்

Makkal Kural Official

திருமலை, ஜன.2-–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

13½ கோடி லட்டுகள்

விற்று சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 13½ கோடி லட்டுகள் விற்பனையாகி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2024-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்தது.

கோவிலில் சாதாரண நாட்களில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் தேவைக்காக 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கூடுதலாக லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்படுகின்றன.

கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் சமையல் அறையில் 700 வைணவ பிராமணர்கள் 2 ஷிப்டுகளில் 24 மணி நேரமும் விதி நியமங்களுடன் லட்டு பிரசாதத்தை தயாரித்து வருகின்றனர். சமீபகாலமாக லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் ருசி அதிகரித்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் மறக்க முடியாத சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *