திருப்பதி, நவ. 21–
திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அவருடன் தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில மந்திரி வங்கலப்புடி அனிதா, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் ஐ.ஜி.ராஜகுமாரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருப்பதி தொகுதி எம்.பி. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு ஜனாதிபதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பலத்த பாதுகாப்போடு திருப்பதி வழியாக திருச்சானூருக்கு சென்றார். அங்கு, பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினர். அதன்பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு திருச்சானூரில் இருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைந்தார். அங்கு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதையடுத்து ஜனாதிபதி, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.
இன்று காலை 9.30 மணி அளவில் திருப்பதி மலையில் வராஹ சாமியை தரிசனம் செய்தார். அங்கு ஜனாதிபதிக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து திருப்பதி கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
![]()





