செய்திகள்

திருபுவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 ஆண்டுகளாக தேடப்பட்ட 4 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, டிச. 10:

இந்துக்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற முயன்றதை கண்டித்ததால், கொலை செய்யப்பட்ட பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 பேரை, தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பா.ம.க., பிரமுகரான இவர் திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து திருவிடைமருதூா் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த எச். முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த எஸ். நிஸாம் அலி, ஒய். சர்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த ஏ. அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், ஆவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

என்.ஐ.ஏ விசாரணைக்கு

மாற்றம்

இந்த கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை மாா்ச் மாதம் 3-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, 18 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு அதில் 13 பேரை கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வருபவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

ரூ.6 லட்சம் பரிசு

இவ் வழக்குத் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மேலும் பலரை கைது செய்தது. இந்த வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த மு.ரகுமான் சாதிக் (39), திருப்புவனத்தைச் சேர்ந்த ஹா.முகமது அலி ஜின்னா (24), கும்பகோணம் மேலக்காவேரி மு.அப்துல் மஜீத் (37), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த மு.புர்ஹானுதீன் (28), திருமங்கலகுடி பகுதியைச் சேர்ந்த தா.சாகுல் ஹமீது (27), அதேப் பகுதியைச் சேர்ந்த அ.நஃபீல் ஹாசன் (28) ஆகிய 6 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் 6 பேருக்கும் சேர்த்து ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.

4 பேர் கைது

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகுடியை சேர்ந்த அ.நஃபீல் ஹாசன் (28) மற்றும் வடமாங்குடி பகுதியை சேர்ந்த மு.புர்ஹானுதீன் (28) ஆகிய இருவரும் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் வரயிருப்பதாக சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கும், தேசிய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் துறையினரின் உதவியுடன் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த டாடா டிகோ காரை நிறுத்தி சோதனையிட்டபோது ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் (33) மற்றும் அப்பாஸ் (30), நஃபீல் ஹாசன் மற்றும் புர்ஹானுதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்களை பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் நான்கு பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேசிய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *