சென்னை, ஆக.1–
சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “வீரம் விளைந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்“ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலமாக கிடைத்தப் அரியப் பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் 106 முதுமக்கள் தாழிகள் அகழாய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
திட்ட மதிப்பீடு ரூ.33 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டுள்ளது. பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஓர் கட்டடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டது.
விரைவாக முடிக்க…
பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் ச.மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
![]()





