செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Makkal Kural Official

தூத்துக்குடி. ஜுலை. 7

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர்.

முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. கோவிலில் யாகசாலை பூஜைகள் ஜூலை 1ம் தேதி துவங்கியது. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாக சாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 வகையான மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளுக்கு தனியாக 5 ஹோமகுண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு 12ம் கால யாகசாலை பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர், யாகசாலையில் இருந்து புனிதநீர் கும்பங்கள் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின் காலை 6.22 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.

ட்ரோன்கள் மூலம்

புனிதநீர் தெளிப்பு

ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். இதில் ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேக விழாவில் ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் ஓதப்பட்டன.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவை காண கடற்கரையிலும் கோவில் வளாகத்திலும், திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளித்தன.

70 பெரிய எல்.இ.டி திரைகள்

கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் எந்தவித நெருக்கடி இன்றி காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கும்பாபிஷேக நிகழ்வை கண்டுகளிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விதுசேகர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், கந்தபுரி ஆதீனம் வாமதேவ ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தங்க சப்பரத்தில்

சண்முகர்

காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் சண்முகம் – வள்ளி–தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதேபோல் சுவாமி குமரவிடங்கபெருமான், ஜெயந்திநாதர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி சுவாமிகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. இதனால் கோவிலுக்குள் நேற்று மதியம் 12 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பாராம்பரிய நடைமுறைகளின்படி, சுவாமிக்கு அபிஷேகங்கள், மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற பின்னரே மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் திருச்செந்தூரில் தற்காலிகமாக 3 பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக 30 இலவச பஸ்களும் இயக்கப்பட்டன.

மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று வல்லக்கோட்டை முருகன் கோவில், திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில், குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *