செய்திகள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதி விபத்து: 9 பேர் பலி

Makkal Kural Official

சென்னை, டிச. 25–

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தன. விபத்தில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டனர். காயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்தது.

கலெக்டர் நேரில் ஆய்வு

இதனால், சென்னையில் இருந்து திருச்சி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.” என தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய ஒரு காரில் வந்தவர்கள் கரூர் சின்ன ஆண்டான் கோயில் சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜரத்தினம் (வயது 67), அவரது மனைவி ராஜேஸ்வரி(57), கார் டிரைவரான ஜெயக்குமார் (30) என்பதும் தெரியவந்தது. இதேபோல் அரசு பேருந்து மோதிய மற்றொரு காரில் திருச்சி திருவரம்பூர் காட்டூரை சேர்ந்த ஒரே குடும்பமான முகமது பாரூக்(45), அவரது மனைவி ரிபானா(33), அவரது மகள் தாஜ்பிர்கா(10), மகன் அப்துல் பாத்தா(7), புதுக்கோட்டை பிள்ளை தண்ணீர் பந்தல் கலீப் நகர் சிராஜூதின் மனைவி குர்ஜீஸ் பாத்திமா(32), இவரது மகன் அஜீஸ் அகமது(3) என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது காசிம், அவரது மனைவி அமிஷா(52), சிராஜூதின் மகன்கள் அக்துல்அஜிஸ்(8), அப்துல் அஹர்(6) ஆகிய 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதலமைச்சர் இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில், பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *