சென்னை, ஜூலை 26–
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 10.45-க்கு சந்தித்து பேசுகிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு 7.50க்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.இந்த விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று இரவு 10.35 மணிக்கு மேல் பிரதமா் மோடி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்திக்கின்றனர்.
அப்போது தமிழக அரசியல் நிலவரம், தாம் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து எடப்பாடி, பிரதமரிடம் விளக்கமாக கூறுவார் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு 20லிருந்து 30 நிமிடங்கள் இருக்கும்.
எடப்பாடியை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் பிரதமரை சந்திக்கும் 13 பேர் கொண்ட பெயர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சந்திப்பிற்கு பிறகு, பிரதமர் சாலை வழியாக பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.
![]()





