திருச்சி, ஜன. 12–
திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய், தாத்தா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமையால் குழந்தை பிறந்ததாகவும், அதனை தங்களால் வளர்க்க முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி அண்மையில் அலுவலகத்தில் பழைய கோப்புகளை பார்த்தபோது, சிறுமியின் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது, சிறுமியை கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை திருச்சி மற்றும் கரூரில் சிறுமியின் தாத்தா, அவரது உறவினர்கள் என 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சிறுமியின் தாய் மற்றும் தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாதிப்புக்குள்ளான சிறுமியின் தாய் மற்றும் தாத்தா ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நயினார் நாகேந்திரன்
கண்டனம்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து, ஆபாசமாக மாற்றி, ஆன்லைனில் விற்பனை செய்த திமுக பிரமுகர் கலைவாணனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, திருச்சியில் திமுக வட்டச் செயலாளர் காளை உட்பட 15 பேரால் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொடூரமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, திமுக அரசின் கோர முகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
காமவெறி பிடித்து அலையும் மிருகங்களைக் கருப்பு சிவப்பு பட்டை அணிவித்து, ஆளுங்கட்சி எனும் திமிரை ஊட்டி வளர்த்து, கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையையும் ஏவல் துறையாக மாற்றி, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை சூறையாடச் செய்தது தான் திமுக அரசின் ஒரே சாதனை!
இந்த லட்சணத்தில், உண்மையை மறைக்க, பல கோடி செலவழித்து தமிழகம் முழுவதும் \”வெல்லும் தமிழ்ப் பெண்கள்\” என நாடக விழா நடத்துவது ஒன்று தான் கேடு! உடன்பிறப்புகளிடமிருந்து தங்களைக் காக்க இயலாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை இனியொருமுறை அரியணையில் அமர்த்தமாட்டார்கள் எம் தமிழ்ப் பெண்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





