திருப்பூர், டிச. 30:
வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள், சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இளைஞரணி மண்டல கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மேற்கு மண்டல மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக பல்லடத்தை அடுத்துள்ள காரணம்பேட்டையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இதில் 1 லட்சம் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 39 தொகுதிகளுக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் அணியினர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கருப்பு, சிவப்பு நிற சேலை அணிந்து இருந்தனர்.
மாலையில் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநாட்டு திடலுக்கு திறந்த வாகனத்தில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அங்கு திரண்டிருந்த பெண்கள் கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டு அவர், மாநாட்டு மேடைக்கு வந்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கருப்பு, சிவப்பு கடல்போன்று லட்சக்கணக்கான பெண்கள், தாய்மார்கள், இப்படி ஒரே இடத்தில் கூடியதாக வரலாறே இருக்காது. உங்களைப் பார்க்கும்போதே, பவர் புல்லாக இருக்கிறது. அது மட்டுமல்ல “வுமன் பவரால் (பெண்கள் சக்தி) தி.மு.க மீண்டும், பவருக்கு (அதிகாரத்துக்கு) வரப்போ வதும், உறுதியாகி இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், இது பெண்களுக்கான ஆட்சி. மகளிர் அனைவரும் இன்றைக்கு அவ்வளவு மனநிறைவாக, மகிழ்ச்சியாக, அதிகாரத்துடன் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திலேயே என்னுடைய அம்மா போன்று நிறைய பேர் இருக்கிறீர்கள். எனக்கு சகோதரிகளாக நிறைய பேர் இருக்கிறீர்கள். ஏன், என்னுடைய மகள்களாக எத்தனையோ பேர் வந்திருக்கிறீர்கள்.
பார்த்து, பார்த்து திட்டங்கள்
உங்கள் அனைவருக்கும் என்ன தேவை என்று பார்த்து, பார்த்து திட்டங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய வெல்லும் தமிழ்ப் பெண்களைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி.
பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேறும் என்று நாம் இவ்வளவு செய்கிறோம். ஆனால், மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது? நாடு முழுவதும் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத்திட்டத்தை இன்றைக்கு இழுத்து மூடியிருக்கிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயனடைந்த வர்களில் 86 சதவீதம் பெண்கள்தான். பெண்களுக்கு வாழ்வளித்த இப்படிப்பட்ட திட்டத்தைத்தான் நிறுத்தி யிருக்கிறார்கள். இதனால் கிராமப் பொருளாதாரமும், பணப் புழக்கமும் அடி வாங்கப்போகிறது. பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது.
இதற்கு ஒத்து ஊதுவது யார்? எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவர் என்ன சொல்கிறார்? “நூறு நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறார்கள்” என பச்சைப் பொய்யைப் பிரசாரமாகச் செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ஆண்டுக்கு சராசரியாக 47 நாள்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள்.
இனி அதுவும் கொடுக்கப்போவ தில்லை. இது போதாதென்று, புதிய திட்டத்தில் நிதிச்சுமையையும் மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டார்கள். இன்னும் பல நிபந்தனைகளை போட்டிருக் கிறார்கள். அதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இதுவரை கிடைத்த 40 நாள் கூட இனி வேலை கிடைக்குமா? என்றே தெரியாத நிலையில் இருக்கிறோம். எதையாவது படித்தால்தானே பழனிசாமிக்கு இவையெல்லாம் புரியும். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை, அ.தி.மு.க. லெட்டர்பேடில் வெளியிட்டு, அத்துடன் கதை முடிந்துவிட்டது என்று செல்கிறார்.
இப்படிப்பட்ட துரோகங்களையும், தடைகளையும் தாண்டித்தான், திராவிட மாடல் ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் சாதனைகளை நாம் செய்துகொண்டு இருக்கிறோம்.
மகளிர் விடியல் பயணத்தால் இதுவரை 900 கோடி முறை பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். பெண்களின் சமையலறைச் சுமையையும் குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் சத்தான, சுவையான உணவைப் பரிமாற வேண்டும் என்றுதான் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனால், ஒவ்வொரு நாளும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 69 குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள்.
பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களின் கல்லூரிக் கனவு தடைபடக் கூடாது என்றுதான், புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திட்டத்தில் மாதம்தோறும், 6 லட்சத்து 92 ஆயிரத்து 471 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.
உள்ளாட்சியில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் 33 சதவீத இட ஒதுக்கீடு அதிகாரம் நாடாளு மன்றத்திலும், சட்டமன்றத்திலும் கிடைக்க வேண்டும். அதுதான் தி.மு.க.வின் லட்சியம். 2017-ம் ஆண்டு டெல்லியில் இதற்காக நம்முடைய மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தங்கை கனிமொழி இதற்காக அழுத்தமாகக் குரல் கொடுத்தார்.
பெண்களுக்கான அதிகாரத்தை
பா.ஜ.க. விரும்பவில்லை
தேவையே இல்லாத நிபந்தனை களுடன், பெண்களுக்கான 33 சதவீத மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. பெண்களாகிய உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத் திலும் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. அதனால் பெயரளவிற்கு மசோதாவை நிறைவேற்றிவிட்டுக் காலத்தைக் கடத்துகிறார்கள்.
நான் நெஞ்சு நிமிர்த்தி, பெருமை யோடு சொல்கிறேன். திராவிட மாடல் ஆட்சியைப் போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதனை செய்த அரசு இருக்கவே முடியாது. இது எல்லாமே, தொடக்கம் மட்டும்தான். இன்னும் நிறைய செய்யப்போகிறோம்.
திராவிட மாடல் 2.0-ல் இப்போது உள்ள திட்டங்களையும் விரிவுபடுத்த போகிறோம். தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீர வேண்டும். அதற்கான உங்கள் பணியை இப்போதே தொடங்க வேண்டும். திராவிட மாடல் 2.0-வும் பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
![]()





