சென்னை, டிச. 31–
திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார். மேலும் அந்த தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு எப்படி நம்பர் 1 மாநிலமாக பெருமையோடு இருக்கிறதோ, அதிலும் குறிப்பாக நாம் எல்லோரும் பெருமைப்படும் அளவிற்கு விளையாட்டுத் துறையில் இன்றைக்கு இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக, நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. அதற்கு நம்முடைய அரசின் முயற்சி மட்டுமே காரணமல்ல, இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், அவர்களுடைய பயிற்சியாளர்கள் இவர்கள் அத்தனைபேருமே இதற்கு காரணம். நம்முடைய அரசினுடைய முயற்சி, அதே போல விளையாட்டு வீரர்களுடைய பயிற்சி இதெல்லாம்தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான வீரர்களையும், வீராங்கனைகளையும் நாம் உருவாக்கி கொண்டு இருக்கின்றோம். அதற்கு இங்கு இருக்கக்கூடிய இந்த மேடை, இந்த அரங்கம் ஒரு சாட்சி.
இந்த ஈரோடு மண்ணைச் சேர்ந்த, விளையாட்டு வீரர்களில் பல சாதனைகள படைத்திருக்கக்கூடிய 2 வீரர்கள் இங்கே மேடையில் உங்கள் முன்பு உட்காந்து இருக்கிறார்கள். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தங்கை சினேகா இங்கே வந்து இருக்கிறார்கள். எவ்வளவு அழகாக தன்னம்பிக்கையுடன் பேசினார்கள் என்பதற்கு, அவர்களுடைய பயிற்சிக்கும், விளையாட்டுத்துறையின் மூலமாக அந்த Exposure மிக, மிக முக்கியம். அதே மாதிரி, தங்கை நித்யா ராம்ராஜ் இங்கே வந்திருக்கிறார். இவரும் நம்முடைய துறையினுடைய SDAT Hostel மாணவி என்பதில் எங்களுக்கு கூடுதல் பெருமை. இன்றைக்கு சர்வதேச அளவில் தடகளத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள் சகோதரி நித்யா ராம்ராஜ்.
சர்வதே போட்டிகள்
நடத்தி சாதனை
நம்முடைய அரசு பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து ஏராளமான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நான்கரை வருடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். சென்னையில் மட்டும் இல்லாமல், இந்த முறை, முதல்முறையாக, மதுரையிலும் சர்வதேச ஹாக்கிப் போட்டியை நடத்தி காட்டினோம். இதற்காக மதுரையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியத்தை 6 மாதத்தில் 20 கோடி ரூபாய் செலவில் நம்முடைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி காட்டினோம். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை, விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று, நாம் மட்டும் இல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும், இன்னும் பல மாநிலங்களும் நம்மை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர்.ப.செல்வராஜ், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி, துணை மேயர் வே.செல்வராஜ், ஆணையாளர் அர்பித் ஜெயின், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை செல்வி சினேகா, தடகள வீராங்கனை செல்வி நித்யா ராமராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
![]()





