சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு:
திண்டுக்கல், டிச.27-–
சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. இவை கடந்த 2019–-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டன. அப்போது அவற்றில் இருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது அம்பலமானது.
இந்த சம்பவத்தில் உன்னி கிருஷ்ணன் போற்றி என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கேரள ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு, தங்கம் அபகரிப்பு விவகாரத்தை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் 7 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
மேலும் கைதான நபர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் அபகரித்த தங்கத்தை வெளிமாநிலங்களில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கைதான நபர்களின் செல்போன் தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே அது தொடர்பான விவரங்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்தனர். அந்த விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சிலரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அதன்மூலம் சபரிமலை தங்க அபகரிப்பு வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்பாபு தலைமையில் 5 பேரை கொண்ட கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்தனர். பின்னர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன், திண்டுக்கல் ரவுண்டு ரோடு ராம்நகரில் சுப்பிரமணி (வயது 52) என்பவரின் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்பிரமணியிடம் 3 மணி நேரம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்றுவிட்டனர்.
![]()





