தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு
திண்டுக்கல், ஆக. 16–
திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின்போது அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்தார்.
இதே நேரத்தில் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும் பழநி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீட்டுக்கும், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராணி வீட்டுக்கும் 2 குழுவாக 3 வாகனங்களில் வந்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள். அவர்கள் இங்கும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை வீட்டில்
அனுமதி மறுப்பு
முன்னதாக சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட சென்ற நிலையில், போலீசார் அங்கு சோதனை நடத்த அனுமதி மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அமைச்சரின் மகன் செந்தில் குமார் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த சென்றார்கள். அப்போது அந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அதன் சாவி எங்கு உள்ளது என்பதை அறிந்து, அதனை கொண்டு வருவதற்கு சுமார் 4 மணி நேரமானது. அதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்து, அறையை திறந்ததும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.கவினர் முற்றுகை
அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதை அறிந்த தி.மு.க.வினர், அமைச்சர் வீடு உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் திரண்டனர். சிஆர்பிஎப் எஸ்பி உதயகுமார் வந்த வாகனத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரது அதரவாளர்கள் வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல்லில் அமைச்சருக்கு தொடர்பான 3 இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 8 பிரிவுகளாக பிரிந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களிலும் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட சொத்து சேர்த்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி மீண்டும் முறையாக ஒப்புதல் பெற்று முறையாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயலகத்தில்
பலத்த பாதுகாப்பு
அமைச்சர் ஐ. பெரியாசாமியின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்துக்குள் வருவோர் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
![]()





