செய்திகள்

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம்

Makkal Kural Official

விழுப்புரம், நவ. 20:

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள பாரதிதாசன்பேட்டையில் சிறிய அளவிலான வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக கொற்றவை வீற்றிருக்கிறார். சுமார் 6 அடி உயரத்தில் இத்தெய்வம் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 8 கரங்களுடன் எருமைத்தலை மீது சமபங்க நிலையில் கால்களை வைத்து கொற்றவை நின்றிருக்கிறார். முன் இடதுகரம் தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் தெளிவாக தெரியவில்லை. அணிகலன்கள் எதுவும் இல்லாமல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஏதோ சில காரணங்களால் இந்த சிற்பம் முழுமை பெறவில்லை. ஆனாலும் வழிபாட்டிற்கு வந்துவிட்டது. இது பல்லவர் காலத்தை சேர்ந்த (கி.பி. 9-ம் நூற்றாண்டு) சிற்பமாகும். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் விஜயவேணுகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது திண்டிவனம் நகரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கிடங்கல் பகுதி சங்க காலத்தில் ஒய்மா நாட்டின் தலைநகராக விளங்கியது. இங்கிருந்து ஒய்மான் நல்லியக்கோடன் ஆட்சி நடத்தி இருக்கிறார். கோட்டையும் இருந்துள்ளது. சங்க காலத்தை தொடர்ந்து பல்லவர் காலத்திலும் கிடங்கல் பகுதி சிறப்புற்று இருந்ததை இங்கிருக்கும் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *