பாங்காக், ஜன. 14–
தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில், பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேக ரயில் திட்டப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், ராட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது திடீரென சரிந்து விழுந்தது. இதில், ரயில் பெட்டியின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும், ரயில் தடம்புரண்டதில், தீப்பிடித்தும் எரிந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ரயிலின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகளை ஹைட்ராலிக் கருவிகள் மூலம் மீட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ள நிலையில் 55 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தாய்லாந்து துணைப் பிரதமரும், போக்குவரத்து அமைச்சருமான பிபாத் ராட்சகித்பிரகார்ன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
![]()





