புதுச்சேரி, டிச. 9–
புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், புதுவை போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. அதிகளவில் கூட்டம் கூடாத வகையில் க்யூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதையொட்டி கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் தொண்டர்கள் வரத் தொடங்கினர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து கியூஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
துப்பாக்கியுடன் வந்த நபர்
இந்த நிலையில், இன்று காலை பிரதான நுழைவு வாயிலை கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் உள்ளே சென்றார். அவரை சோதனை செய்தபோது, அவரது இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் கேட்டுள்ளது. அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார். அதில் தமிழக முகவரி இருந்தது. ஆனால் போலீசார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பி, உடனே அவரை தனிமைப்படுத்திய காவல் துறை அதிகாரிகள், கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளிட்டவை குறித்தும், பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள் என்பது குறித்து மூத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் விசாரணை நடத்தினர்.
யார் அந்த நபர்?
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சிஆர்பிஎப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும் தெரியவந்தது.
ஆனந்த்தை எச்சரித்த
பெண் போலீஸ் அதிகாரி
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை புதுவை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்த காணொலி வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
க்யூஆர் கோட் அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரை அனுமதிக்கக் கோரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஈஷா சிங்கிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீர்கள். உங்களால் பலர் இறந்துள்ளார்கள்.” என ஆக்ரோஷமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
தள்ளுமுள்ளு, தடியடி
விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயன்ற தொண்டர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், லேசான தடியடி நடத்தப்பட்டது.
பிரசாரக் கூட்டம் நடைபெற உள்ள நுழைவுவாயிலில் க்யூ.ஆர்.கோடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசார் ஒவ்வொருவராக உள்ளே அனுப்ப முற்பட்டனர்.
அப்போது ஒவ்வொரு ஆளாக உள்ளே அனுப்பும் போது ரசிகர்கள் அனைவரும் கும்பலாக முண்டியடித்துக் கொண்டு போலீசாரையும் மீறி கதவை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார், அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.
அப்போது ரசிகர்கள் விஜய்… தளபதி.. தவெக.. என முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார் வாயில் கதவை இழுத்து முடியாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பொதுச்செயலாளர் ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
புதுச்சேரி போலீசுக்கு
நன்றி தெரிவித்த தவெக
விஜய் பிரச்சார கூட்டத்தில் முதலில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பேசத் தொடங்கினார்.அவர் பேசுகையில், ஒத்துழைப்பு தந்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
இத்தனை பேர் இங்கே திரண்டிருப்பதைப் பார்க்கும்போது புதுச்சேரியிலும் தவெக ஆட்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆனந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் தவெக கூட்டம் என்றால் எல்லாவற்றுக்கும் பிரச்சினைதான். எத்தனை விதிகளை விதித்திருந்தாலும் இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார் என்றார்.
இதனைத் தொடர்ந்து த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள். தமிழ்நாடு முதல்வர், புதுச்சேரியைப் பார்த்து சட்டம் ஒழுங்கை கற்றுக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் சேர்த்து விஜய் பல திட்டங்களை வைத்துள்ளார். காற்றை நிறுத்த முடியுமா? வெள்ளத்தை நிறுத்த முடியுமா? தவெகவையும் தடுத்து நிறுத்த முடியாது.
கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும். புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.
![]()





