செய்திகள்

தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் 521 பெண்களுக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 27–-

சென்னை மாவட்டத்தில் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.2.22 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை, ஜார்ஜ் டவுன், ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சென்னை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூபாய் 2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியினையும் வழங்கினார்.

முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் மகளிருக்கு உதவிடும் வகையில் டாக்டர்.முத்துலடசுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித்திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவித் திட்டம் என நான்கு வகையான திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இத்திட்டங்களின் கீழ் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சிப் பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிர-மும், பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிர-மும் வழங்கப்படுகிறது. இத்துடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் 2024–-25ஆம் நிதியாண்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியான 521 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, நேற்று (26–ந் தேதி) பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த 370 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் -வீதம் ரூபாய் 1 கோடியே 85 லட்சமும், பத்தாம் வகுப்பு முடித்த 151 பயனாளிகளுக்கு ரூபாய் 37 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் 521 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகையினையும், திருமாங்கல்யம் செய்வதற்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 4,168 கிராம் தங்க நாணயங்களையும் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ.வெற்றிஅழகன், வருவாய் அலுவலர் சு.கீதா, ராயபுரம் மண்டல குழுத்தலைவர் ஸ்ரீராமலு, திரு.வி.க. நகர் மண்டல குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சமூக நல அலுவலர்கள் ம.ஹரிதா, வெ.முத்துச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *