மும்பை, நவ. 11–
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ‘நட்சத்திர’ மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தித் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்மேந்திரா (வயது 89). மூச்சுத் திணறல், உயர் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் தர்மேந்திரா இருப்பதாகவும், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் தீவிரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தர்மேந்திரா இன்று (11–ந் தேதி) காலை உயிரிழந்துவிட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவி ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்ன நடக்கிறது என்பது தெரியாமல் செய்தி வெளியிடுவது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளித்துவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி சேனல்கள் எவ்வாறு தவறான தகவல்கள் பரப்ப முடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]()





