செய்திகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகள்

Makkal Kural Official

தர்மபுரி, ஆக.17–

தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:–

1. – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும்.

2. ஒகேனக்கல் – தருமபுரியை இணைக்கக் கூடிய மாவட்ட நெடுஞ்சாலையில், தருமபுரியில் இருக்கின்ற ஆட்டுக்காரம்பட்டி முதல் பென்னாகரம் வரை உள்ள 25 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பகுதி, தற்போதுள்ள இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக, 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டமாக மேம்படுத்தப்படும்.

3. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பரிகம் ஊராட்சியில், பரிகம் முதல் மலையூர் வரை உள்ள வனச்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தார்ச் சாலையாக மேம்படுத்தப்படும். நல்லம்பள்ளியில் இருக்கின்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.

4. அதிக அளவில், புளி உற்பத்தி செய்கின்ற தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும்.

5. அரூர் நகராட்சியில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி, வள்ளிமதுரை குடிநீர் வழங்கல் திட்டம் புதிய குழாய்களை பதித்தும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தும், 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இப்படி, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியின், ஒவ்வொரு தனிமனிதருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றித் தருகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *