சென்னை, நவ.9-
6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022–2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து 4 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 453 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 578 விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு 2025–2026 ஆண்டு கொள்முதல் பருவத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 2026 ஜனவரி 31-ந் தேதி வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகளிடமிருந்து 6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.42 ஆயிரத்து 900-க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு டன் கேழ்வரகு, தற்போது ரூ.5 ஆயிரத்து 960 அதிகரித்து, ரூ.48 ஆயிரத்து 860 என கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட கேழ்வரகு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கேழ்வரகினைத் தங்கள் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
![]()





