செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாத தி.மு.க : புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன்

Makkal Kural Official

புதுக்கோட்டை, ஜன. 5:

தமிழ் கலாச்சாரத்தை மதிக்க தெரியாத தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று தொண்டர் களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-–

யாத்திரையின்போது எனக்கு எல்லா கிராமத்திற்கும், அனைத்து நகரங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டேன். கோவிலுக்கு சென்றால், இந்த ஆட்சி எப்போது வெளியே செல்லும் என்றுதான் குடும்பமாக வேண்டுகிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். வீட்டில் இருக்கும்போது, வெளியே செல்ல என எங்கும் பயம். காரணம் எங்கும் போதை மயம். இப்படி பயம் கலந்த ஆட்சியில் தான் மக்கள் இருக்கிறார்கள். இது இறுதி யாத்திரை அல்ல. இதை நாம் தொடக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை மூன்று மாதங்கள் விரதம் இருந்து, அயராது பாடுபட வேண்டும்.

பெண்களை தி.மு.க. அமைச்சர்கள் தவறாக பேசுகிறார்கள். தமிழ் கலாசாரத்தை மதிக்க தெரியாதவர் ஆட்சியில் இருக்கிறார். தனது மகனை முதல்வராக்க மிகப்பெரிய போலி கூட்டணியை உருவாக்கி உள்ளார். ஆனால் எங்களது கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி. திருப்பரங்குன்றத்தில் பூரணச்சந்திரன் என்ற இளைஞர் தனது உடலில் தீயை வைத்துக் கொண்டு இறந்ததற்கு முதலமைச்சர் தான் காரணம். பிரதமர் அனைத்து மதங்களையும் மதிக்கிறார். மதச்சார்பின்மையை உண்மையாக கடைப்பிடிக்கும் கட்சி பா.ஜ.க.. ஆனால் நீங்கள் போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறீர்கள்.

நமது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் கூட்டணி. பீகார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழகத்திலும் வீசும். இன்று 234 தொகுதியில் பா.ஜ.க. பூத் கமிட்டி வலிமையாக உள்ளது. எங்களது கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய இந்த `தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த யாத்திரை தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புகின்ற யாத்திரை ஆகும். வெற்றிவேல் யாத்திரையை நடத்தினோம். அதில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை நடத்தினோம். 18 சதவீத வாக்குகளை பெற்றோம். அதேபோல் `தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ நம்முடைய தேசிய ஜனநாயக கூட்டணியுடைய ஆட்சியை உறுதி செய்கிற யாத்திரை, என்றார்.

ஆட்சி மாற்றம் ஏற்படும்:

அண்ணாமலை

பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய தாவது: – தமிழகத்தில் சட்டம்-–ஒழுங்கு மோசமாக உள்ளது. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு 100 சதவீதம் நன்றாக உள்ளது. தமிழகத்துக்கு சிறந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கொடுக்கப்பட்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி 200 தொகுதிகளை தாண்டி யாத்திரை வந்து கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சி வேண்டாம் என்றுள்ளனர். தி.மு.க.வை அனைவரும் திட்டித்தீர்த்து வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது. தலையாட்டி பொம்மை போல் முதலமைச்சர் செயல்படுகிறார். தமிழகத்தில் இன்று எந்த தொழில் தொடங்குவதானாலும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள். இதனால் முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு செல்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருக்கும்போது ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட 28 வாக்குறுதிகளில் 3 வாக்குறுதிகளை தவிர எதையும் நிறைவேற்றவில்லை. பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் நாம் ஓட்டுப் போடுவோம் என முதலமைச்சர் நினைக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் கடன் இருந்தது. தற்போது ஒரு ரேஷன்கார்டுக்கு ரூ.4 லட்சத்து 54 ஆயிரம் கடன் உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டு ஒரு கார்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடன் சுமையை ஏற்றியுள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3-ல் 2 பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நமக்கு கிடைப்பார்கள். அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *