செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

Makkal Kural Official

சென்னை, ஆக.14–

தமிழ்நாடு வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

2025–-26ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல்கொள்முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். கழக அரசு பொறுப்பேற்ற ஆண்டில் 2021–-22–ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 43.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2024–-25ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் என்றுமில்லாத அளவிற்கு நேற்று (13–ந் தேதி) வரை 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.83 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 40,440.21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.1,816.46 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நெல்கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாள் தான் தொடங்கும். செப்டம்பரில் அறுவடையாகும் நெல்லை மழைக் காலத்தில் அக்டோபர் மாதத்தில் வாங்கும் நிலை தான் இருந்தது. இதை மாற்றி செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட நம்முடைய முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று 2022–-2023ம் ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.70 ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.50 ஆகவும் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பத்தாண்டுகளில் நெல்கொள்முதலுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படவே இல்லை.

“ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது” என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதால் திறந்த வெளியில் வைக்காமல் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்களில் நெல் சேமிக்கப்படுகிறது.

333 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 4 லட்சத்து 3 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

25 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட நடவடிக்கையில் உள்ளது.

2025 – 2026–ம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 நவீன சேமிப்பு வளாகங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன சேமிப்பு வளாகங்கள் என ஆக மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட 26 நவீன சேமிப்பு வளாகங்கள் 469 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

ஆக மொத்தம் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரூபாய் 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது. இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையிலிருந்தாலும் எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும் நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்வரத்து அதிகமாக இருந்ததால் சில இடங்களில் தேக்கம் ஏற்பட்டாலும் நெல்லை உடனுக்குடன் அரிசி அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டு என்றுமில்லாத அளவிற்கு விரைந்து நெல் அரைக்கப்பட்டு வருகிறது. நெல் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் தலைமையிலான அரசு என்றும் பாதுகாவலாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *