பிரதமர் மோடி பேச்சு
தூத்துக்குடி, ஜூலை.27-
”மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை நிதியை வழங்கியுள்ளது. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, 3 மடங்கு அதிகம். நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் கடந்த 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி, மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று இரவு 7.35 மணி அளவில் வந்தார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர்.
இதன்பிறகு ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் புதிய முனையத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். தூத்துக்குடியை பிரதிபலிக்கும் வகையில் முத்துச்சிப்பி, சுதேசி கப்பல், பயணிகள் முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு புகைப்படங்களையும் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார்.
ரூ.4,874 கோடி திட்ட பணிகள்
தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரூ.4 ஆயிரத்து 874 கோடி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–-
கார்கில் வீரர்களுக்கு முதலில் தலை வணங்குகிறேன். நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு பின், புனித மண்ணில் கால் பதித்துள்ளேன். வெளிநாட்டு பயணத்தின் போது, பிரிட்டன் நாட்டுடன் வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பாரதம் மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை படைப்போம்; வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்குவோம்.
தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகளில், புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் குறிக்கோள், 2014ல் துவக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள், மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இதில், விமான நிலையங்கள், சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே திட்டங்களுடன், எரிசக்தி துறை சார்ந்த திட்டங்கள் உள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை.
கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்ட மைப்பு மற்றும் எரிசக்தி துறையில் முனைப்பான கவனம் செலுத்தினோம். தமிழகத்தின் வளர்ச்சி எத்தனை முதன்மையானது என்பதை, இந்த திட்டங்கள் காட்டுகின்றன.
இங்குள்ள மக்கள், பல நுாற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்தி படைத்த பாரதத்திற்காக தங்கள் பங்களிப்பை அளித்து வந்துள்ளனர். இதே மண்ணில்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், சுப்ரமணிய பாரதி பிறந்துள்ளனர்.
பாரதியாருக்கு தூத்துக்குடியோடு உள்ள உறவு போன்ற பலமான உறவு, என் தொகுதியான காசியோடும் உள்ளது. கடந்த ஆண்டு, நான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில்கேட்சுக்கு பரிசாக அளித்தேன். அவருக்கு அந்த நல்முத்துக்கள் பிடித்திருந்தன. நம் பாண்டிய நாட்டு முத்துக்கள், உலகம் முழுவதும் நம் அடையாளமாக உள்ளன.
இந்தியா -– பிரிட்டன் இடையிலான ஒப்பந்தம், பாரதத்திற்கு புதிய பலத்தை அளிக்கும். உலகின் மூன்றாவது பொருாளதார நாடாகும் நம் வேகம் இன்னும் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்திற்கு பின், பிரிட்டனில் விற்பனையாகும், 99 சதவீத பாரத நாட்டின் பொருட்களுக்கு, எந்த வரியும் விதிக்கப்படாது.
பிரிட்டனில் பாரத பொருட்கள் விலை மலிவாக இருக்கும்; அவற்றின் தேவை அதிகரிக்கும். பாரதத்தில் அந்த பொருட்களை உருவாக்க, அதிக வாய்ப்புகள் உருவாகும். பாரதம், பிரிட்டன் இடையிலான வணிக ஒப்பந்தம், நம் நாட்டு இளைஞர்களுக்கு, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று, ‘மேக் இன் இந்தியா’ திட்டம், நாட்டிற்கு அதிக வலு சேர்க்கிறது. இதை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போரில் கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.
பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை, மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பெரும் பங்கு வகித்தன. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களை, தூங்க விடாமல் செய்துள்ளது.
தமிழகத்தின் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த, உள்கட்ட மைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சியை, மத்திய அரசு செய்து வருகிறது.
20 லட்சம் பயணிகளை
வரவேற்கலாம்
தூத்துக்குடி விமான நிலையத்தில், 450 கோடி ரூபாயில், புதிய முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணியரை வரவேற்கும். முன்பு ஆண்டுக்கு 3 லட்சம் பயணியர் மட்டுமே கையாளும் திறன் இருந்தது. இது, இங்குள்ள வியாபாரத்திற்கும், தொழிலுக்கும் ஊக்கம் அளிக்கும். இப்பகுதியில் சுற்றுலாவுக்கு புதிய ஊக்கம் கிடைக்கும்.
நம் நாட்டில் ரெயில்வே துறை நவீனமயமாக்கப்படுகிறது. ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்ளில் மறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. நாடு முழுவதும் நவீன கட்டமைப்புகளை உருவாக்கும் வேள்வி நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, காஷ்மீர் ரெயில்வே பாலம் திறக்கப்பட்டது. இது, காஷ்மீரை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. மேலும் மிக நீளமான கடல் பாலம், சுரங்க பாலம் என பல திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
‘தமிழகத்தின் வளர்ச்சி; மேம்பட்ட தமிழ்நாடு’ என்ற கனவு, நமது முக்கியமான குறிக்கோளாகும். நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு, முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது.
இது கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும்போது, 3 மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த அரசும் செய்யாத அளவுக்கு, நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக, தூத்துக்குடி மாறி வருகிறது. போக்குவரத்து இணைப்பு, மின் பரிமாற்றம், கட்டமைப்பு என அனைத்து வசதிகளுடன், வளர்ச்சி அடைந்த தமிழகம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் ஆதாரமாக மாறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நினைவுப்பரிசு
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், டி.ஆர்.பி.ராஜா, கனிமொழி எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெலுங்கானா மாநில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் வடிவிலான நினைவு பரிசை வழங்கினார்
பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
![]()





