சென்னை, ஜன.19-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்தலை நடத்த இமாசலப்பிரதேச ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜிவ் ஷக்தர், ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஓம்.பிரகாஷ், வக்கீல் அமித்ஜார்ஜ் ஆகியோர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த உயர்மட்ட குழு, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பார் கவுன்சில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு தேர்தல் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகனிடம் கேட்டபோது, தேர்தலை வருகிற மார்ச் 30-ந்தேதி நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
![]()





