சென்னை, நவ. 23:
ஒன்றிய அரசு துறைகளில் தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஊக்குவிக்காமல், நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தமிழ்நாடு கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னை இராயப்பேட்டையிலுள்ள ஐ.என்.டி.யு.சி அலுவலகமான ஜி.ஆர். பவனில், தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மு. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் கோவை செல்வம், வாழப்பாடி இராம. கர்ணன், துறைமுகம் முனுசாமி, கோபிநாத், பன்னீர்செல்வம், ஆலந்தூர் நாகராஜ், ஜி.ஜெயபால், எம்.ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜி.சரவணன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி-க்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைபடி சென்னை உயர்நீதி மன்ற டிவிஷன் பென்ஞ் அமர்வின் உத்தரபடி, நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கொடுத்தவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிகிறது. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி-.யின் புதிய மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை நியமித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி செயற்குழுவில் புதிய மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இந்த செயற்குழு கூட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களை அதிகப்படுத்தி சங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக தலைவருக்கு முழு அதிகாரம் கொடுத்து இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.-சி.யின் துணை விதிகளின்படி, ஐ.என்.டி.யு.சி. தமிழ்நாடு கிளைக்கு சொந்தமான வங்கியில் உள்ள சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளை இயக்குவதற்கு, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.பன்னீர்செல்வம் மற்றும் பொருளாளர் வாழப்பாடி இராம. கர்ணன் ஆகிய இருவருக்கும் துணை விதிகளின்படி முழு அதிகாரம் அளிக்கப்பட்டுகிறது.
தேர்தல் இல்லாத காலத்தில், தீவிரமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது வழக்கமாக நடத்தப்படும் பயிற்சியாக இருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை என்.ஆர்.சி. செயல்படுத்துவதற்கான மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் எஸ்.ஐ.ஆர். முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். மேலும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. எஸ்.ஐ.ஆர்-ஐ. இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ரூ.5000 உதவித்தொகை வழங்குக
அரசு போக்குவரத்து தொழிற்சங்களுடன் நிர்வாகமும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கிடவும், பென்ஷன் தொகையை மாதத்தின் முதல் நாளே வழங்கவும் ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. ஒன்றிய அரசு தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்பதை ஊக்குவிக்காமல், அரசு துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுபாப்பு அளித்து உறுதிசெய்ய வேண்டும்.
மின்வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை. ஆகவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
![]()





