செய்திகள்

“தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது”

Makkal Kural Official

தமிழக அரசு பெருமிதம்

சென்னை, ஜூலை.23-

தனிநபர் வருமானத்தில் 2வது இடம் பெற்ற தகவல் வெளியன நிலையில், தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024–2025ம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது என பாராட்டப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவிலேயே தமிழ்நாடு இதுபோன்ற சாதனையை நிகழ்த்தி உள்ளதற்கு, முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளாக அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வரும் புதுமையான திட்டங்கள்தான் காரணம்.

* 700 கோடி பயண நடைகளுக்கு மேல் மகளிர் பயன்பெறும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்.

* 4.95 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.

* 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்.

* 1.15 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

* 4 கோடிக்கும் மேலான மக்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருத்துவ வசதி, ஐ.நா. அமைப்பு பாராட்டியுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.

* ரூ.660 கோடியில் 95.97 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் இல்லம் தேடி கல்வித் திட்டம்.

* 2 லட்சத்திற்கு மேலான ஏழை, எளியோர் வீடு கட்ட தலா ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம்.

* ரூ.648.12 கோடியில் 10 லட்சத்து 96 ஆயிரத்து 289 உயிர்களைக் காத்துள்ள இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம்.

* 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்து, 3 லட்சத்து 28 ஆயிரத்து 391 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற உதவியுள்ள நான்முதல்வன் திட்டம்.

* 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த 10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி முதலீடுகள்.

* இவற்றின் வாயிலாகப் பெருகும் 32 லட்சத்து 4 ஆயிரத்து 895 வேலைவாய்ப்புகள்.

இவை போன்ற திட்டங்களே, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் மற்றும் புதிய உச்சத்தை அடைந்த வெற்றிக்கு அடித்தளங்களாக உள்ளன. இப்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் சூட்டியுள்ளது.

கடந்த 21-ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில், தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 710 ஆகும். இந்திய தேசிய சராசரி, தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து, தமிழ்நாடு ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 309 பெற்று இந்தியாவிலேயே 2-வது இடத்தில் உள்ளது என்று அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத் திறன்களாலும், சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் இந்த அறிவிப்பாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *