சென்னை, ஜன.19-–
தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ம் தேதி சென்னை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.விற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து வருகிற 23-ந்தேதி மதுராந்தகத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதற்காக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில், மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கனகசபாபதி, பொதுச்செயலாளர்கள் ராம சீனிவாசன், கார்த்தியாயினி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்.
மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் ஆதித்யா சேதுபதி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





